Friday, September 24, 2010

நினைவிருக்கிறதா!?



நிற்காமல் விக்கியதைப் பார்த்து
'ஐ லவ் யு!' என்று சட்டென சொல்லி
என்னை அதிர வைத்து விட்டு
என்னவென்று கேட்ட தோழியிடம்
'பயமுறுத்தினால் விக்கல் நிற்குமாமே',
என்று சமாளித்தாயே,
நினைவிருக்கிறதா!?.......

'உன் மனம்
உன்னைவிட
எனக்குத் தான் தெரியும்' என்று
சொல்லிச் சொல்லியே
உன்னை நேசிக்க வைத்தாயே,
நினைவிருக்கிறதா!?.......

'என்னவன் நீ
எனக்கு மட்டும் தான்!' என்று
நான் மனதில் நினைத்ததைக்
கண்டு கொண்டு சிரித்தாயே,
நினைவிருக்கிறதா!?.......

காற்று கலைத்த கேசம்
முன் நெற்றியில்
விழுந்து புரண்ட போது
இதமாய்க் கோதி விட்டாயே,
நினைவிருக்கிறதா!?.......

என் பிறந்த தினத்திற்கு
ஜோடிப் புறாவைக் கையில் கொடுத்து
'உனக்கு பரிசளித்தது
அவற்றின் சுதந்திரத்தை தான்' என்று சொல்லிப்
பறக்க விட வைத்தாயே,
நினைவிருக்கிறதா!?.......

ஆயிரம் செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டாலும்
சீண்டிச் சினம் ஏற்றினால்
முழுப் பெயர் சொல்லி
முறைப்பாயே,
நினைவிருக்கிறதா!?.......

'சின்ன சின்ன சண்டைகள்
இருப்பது தான்
சுவாரசியம்' என்று சொல்லிச்
சண்டை பிடிப்பாயே,
நினைவிருக்கிறதா!?.......

'என் இதயமெனும் பெட்டகத்தில்
பொக்கிஷங்களாய் இருப்பது
உனது நினைவுகள் தான்' என்று நீ சொன்னது
உனக்கு நினைவிருக்கிறதா அன்பே.....!?

No comments: