Monday, December 15, 2008

முதல் முத்தம்!



வானம்
சந்தோஷத்தில்
மழைத் தாரைகளை
வாரியிறைத்துக் கொண்டிருந்தது!

உச்சி விழுந்த துளிகள்
உடல் நனைத்தத்தில்
உயிர் வரை
நடுங்கிக் கொண்டிருந்தேன்!

திடீரென்று
மண்வாசனையை மீறய
உன் வாசனை உணர்ந்து
திரும்பிப் பார்த்தால்
என் அருகாமையில் நீ!

ஒரு நொடி
நின்று துடித்தது
என் இதயம்!

இமைக்க மறந்து
உன்னை நான் பார்த்த போது
“இனியவளே!” என்றழைத்து
நெருங்கி வந்தாய்!

எலும்பை உடுருவும்
அந்தக் குளிரில்
உன் வெப்பம் தேடி
உள்ளம் அலை பாய
உதட்டைக் கடித்து
என்னை அடக்கிக் கொண்டேன்!

என் நிலை கண்டு
லேசாய் முறுவலித்தாய்!.....

கன்னங்கள் சிவந்து போனது!...
“முகத்தின் வழி
என் உள்ளம் கண்டு கொண்டாயோ!?...” என்று

மீண்டும் நெருங்கி வந்து
இடை வளைத்து – என்
இதழ் அணைத்தாய்!...

முதல் ஸ்பரிசம்! – உன்
முதல் முத்தம்!

விலக்கத் தோன்றவில்லை!...
விலக்கவும் முடியவில்லை!

உன் அணைப்பில்
உலகம் மறந்து நின்றேன்!

எவ்வளவு நேரம்
அப்படிக் கழிந்ததோ!?...

அந்த மோகன நிலைக்குள்ளும்
யாரோ அழைத்தது போல் தோன்ற…
மூடி இருந்த இமைகளை
பிரித்து பார்த்தேன்!

உடல் நனைத்த
மழை இல்லை!...

இதழ் அணைத்த
நீயும் இல்லை!...

நான் எப்படி
என் அறையில்!?

அட…
அனைத்தும்கனவு தானா!?...

எப்படி!?...

மறந்து விடச் சொன்னாய்!...

என் நாட்குறிப்பேட்டில் இருந்து
உன்னை பற்றிய குறிப்புக்களை
அழித்து விட்டேன்!

எனது நாட்களில் இருந்து
உனக்காக
நான் ஒதுக்கிய நிமிடங்களை
நீக்கி விட்டேன்!

உனது கடிதங்கள்…
உனது புகைப் படங்கள்!…
உனது கவிதைகள்!…
அனைத்தையும் எரித்து விட்டேன்!
ம்....
மன ஏட்டில் இருந்தும் கூட
உன்னை நீக்குவதற்கு
முயற்சிகள் நடக்கிறது!…
ஆனால்....
நானே உன்னைப் பற்றிய
நினைவாகும் போது
என்ன செய்து என்ன!?...
மறப்பது எப்படி சாத்தியமாகும்!?......

நீ அழைத்த என் பெயர்!…
நீ ரசித்த என் புன்னகை!…
நீ தீண்டிய என் விரல்கள்!…
நீ கோதிய என் கூந்தல்!...
நீ முத்தமிட்ட என் இதழ்கள்!…
நீ நேசித்ததாய் சொன்ன என் இதயம்!...

இப்படி – "என்"
அனைத்திலும்
நீ!…
நீ!…
நீ மட்டும் தானேடா
இருக்கிறாய்!

பின் எப்படியடா
உன்னை நான் மறக்க முடியும்!?......

ஏதோ!.........

விழிகளின் வழி புகுந்த
மின்னல் ஒன்று
என் உள்ளத்தை
லேசாய் வருடிச் சென்றது!

இரண்டே இரண்டு நொடிகள் தான்
உன்னை நான் பார்த்தது!...

அதற்குள்ளாக
என் இதயத்துள் நுழைந்து விட்டாயா???

அதிசயம் தான்!...

எதுவுமே தெரியாது!...
உன் பெயர்…
உன் வயது…
உன் ஊர்...

நீ தமிழன்
என்பதைத் தவிர!

என்ன நடக்கிறது
எனக்குள்!?

யாரடா நீ!?
என்னுள் இவ்வளவு மாற்றம் தருகிறாயே!...
உன் முகத்தைக் கூட
முழுதாய் பார்க்கவில்லை!...
ஆனா போதும் மனதில் ஏதோ ஓர் உயிர்ப்பு!...

இதன் பெயர் என்ன?....
முடிவாய் சொல்லுவதற்கு
எனக்கு என் மனம்
இன்னமும் புரியவில்லை….

ஆனாலும் ஏதோ...
இனம் புரியாத ஏதோ ஒன்று!..............

காதலிக்கும் போது!...

கண்களில் விழும் போது
கனவுகள் பிறக்கும்!

ஜாடை பேசும் போது
யாவும் புதிதாய்த் தோன்றும்!

இதயத்துள் நுழையும் போது
இனிமை வரும்!

திருட்டுப் பார்வைகளின் போது - வெட்கம்
தாவி வந்து கட்டிக் கொள்ளும்!

சீண்டிப் பார்க்கும் போது - சினந்தாலும்
சிரித்துக் கொள்ளத் தோன்றும்!

உயிரில் கலக்கும் போது
உணர்வுகள் பூப் பூக்கும்!



இதழ் சுளிக்கும் போது
இதயம் வலிக்கும்!

முகம் திருப்பும் போது
மனம் உடையும்!

தெரிந்தே விலகும் போது – அனைத்தும்
தெவிட்டிப் போகும்!

பேச்சை நிறுத்தும் போது - தூக்கம்
பறந்து போகும்!

முழுதாய் முறிக்கும் போதோ – வாழ்க்கையே
முழ்கிப் போய் விடும்!

Monday, August 18, 2008

உன் கவிதை!...

எதுகை மோனையுடன்
வார்த்தைகளில் நளினம் சேர்த்து
பொய்யை மட்டுமே
சொல்வது தான்
கவிதையா!?...

கண்களில்
மின்னல் சிமிட்ட,
பற்களில்
முத்துக்கள் மின்ன,
அழகாய்ப் புன்னகைக்கிறாய்!

உன் போல் கவிதை சொல்ல
யாராலும் முடியாதுடா!...

வலி தான்!
உன் முகம் பார்க்கையில்!…
உன் பெயர் கேட்கையில்!…
உன் புன்னகையை ரசிக்கையில்!...
என்ன வலித்த போதும்
என் மனம் தேடுவதெல்லாம்
உன்னை மட்டும் தான்!
உன்னைப் பார்க்கக் கூடாது
என்று தான் இருப்பேன்...
இமைகள் இரண்டையும்
இறுக்க மூடிக் கொண்டு!...
ஆனால்
நினைவுகளின் கண்கள்
அகலத் திறந்து கொள்கின்றனவே…
வார்த்தைகளால் காயப் படுத்தினாய்!...
இதயம் இமை மூடிக் கதறுகிறது!
கலங்கும் கண்களை
யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு…
விம்மும் நெஞ்சை அழுத்திக் கொண்டு…
அடிக்கடி உளறிக் கொட்டி விடும் வார்த்தைகளை
சமாளித்துக் கொண்டு…
எத்தனை நாள் தான் இருக்க முடியும்!!??...
புதையல் எனப் பொத்தி வைத்த நினைவுகள்
விஷமாகித் தாக்கியதில்
மூச்சுக் காற்றுக்குத் தடுமாறுகிறது இதயம்!...
நிகழ்காலம்
கானலாய்ப் போனதில்…
என் எதிர்காலம்
மாயத் தோற்றமாய் மிரட்டுகிறது!

காதலிக்கும் போது....

என் வேதனைகளை
எதில் கொட்டுவது என்று தெரியாமல்
கவிதைகளாய் கிறுக்கித் தள்ளுகிறேன்….
என் கண்ணீரை என்ன செய்வது!?…

விழி எனும் குளம்
தன் கரைகளை
உடைத்துக் கொள்ளும் போதெல்லாம்
தலையணை மட்டுமே
துணையாகிப் போகிறது!…

பேதை எனக்கு
மெளனமாய் அழத் தான் தெரிகிறது!...
என் மனதை உனக்குப்
புரிய வைக்கத் தெரியவில்லையே!!!

நான் அப்படி என்ன பாவம் செய்தேன்!?...
இப்படி என்னைக் கதற வைக்கிறாயே…

உன்னை உண்மையாய் நேசித்தது பாவமா?...
உன் மீது உயிரையே வைத்தது பாவமா?...
நீ வார்த்தைகளால் கடித்துக் குதறும் போதும்
உன்னை வெறுக்கத் தெரியாதது பாவமா?...
மனக் காயத்தின் வலிகளை மீறி
உனது நினைவுகள் விஸ்வரூபம் எடுப்பது பாவமா?...
எதுடா நான் செய்த பாவம்?????

இதயத்தை உன் புன்னகைகள் தான்
மலர வைத்தது!…
மலர்ந்த என் இதயத்தை
உன் வார்த்தைகள் இன்று எரிக்கின்றது!

என்னுள்ளே கொளுந்துவிட்டெரியும்
உனது நினைவுகளை
அணைக்கும் வழி தெரிந்தும்
அணைக்க மனமில்லாமல் நான்!….

மூடிய இமைகளுக்குள் தோன்றி
முறுவலித்தே வதைக்கிறாய் நீ!...

காதலிக்கவே கூடாது என்று இருந்த என்னை
உன் புன்னகைகள் கலைத்தது!...
நான் வளர்த்த காதலை
உன் வார்த்தைகள் கலைக்க சொல்கிறது!!!…
என்னடா நியாயம் இது!!!???

கொஞ்ச நாட்களாய்
தொண்டையில் சிக்குகிறது உணவு!..
பதறுகிறாள் அம்மா!…
என்னவென்று சொல்வேன் நான்!?

கனவுகள் கலைந்து விடும் என்று
காணும் போது தெரிவதில்லை!…
அதே போல
காணும் கனவுகளோடு சேர்ந்து
வாழ்க்கையும் கலைந்து விடும் என்று
காதலிக்கும் போது தெரிவதில்லை!!!

(என்)அவன்!

நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை
அழகாய்க் கோதிக் கொள்வாய்!...
கோதும் கை பிடித்து நடக்க
ஆசை நெஞ்சை முட்டும்!

அழகாய்த் தான் சிரிப்பாய்!...
ஏனோ எரிச்சலாய் இருக்கும்…
என்னைப் போலவே
எல்லோரும் ரசிப்பார்களே என்று!

இடது கையில் நகம் கடிப்பாய்!...
என்னைப் போலவே!
எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் தெரியுமா!?...

அன்று பார்த்தாயே…
ஒற்றைப் புருவம் உயர்த்தி!
நீ என்ன நினைத்துப் பார்த்தாயோ…
நான் பற்றி எரிந்தது உண்மை!

தெரிந்தே
வில(க்)கிச் செல்வாய்!...
வலித்த போதும்
ரசிப்பேன்!

குழந்தை ஒன்றை முத்தமிட்டாய்!
ஏனோ என் கன்னம் சிவந்து போனது!…
கண்ணை மூடி அந்தக் குழந்தையாய்
என்னைக் கற்பனை செய்ததாலா!?...

வார்த்தைகளாய்
காயம் செய்வாய்!...
விசித்திரமான வகையில்
இனிக்கும்!

அலட்சியமாய்
திருப்பிக் கொள்வாய்!...
என் உதடுகள்
எனையறியாமல் புன்னகைக்கும்!

எனக்குப் பிடித்த கருப்பு உடையில்
காற்று கேசம் கலைக்க
மந்தகாசப் புன்னகையுடன் நின்றாயே ஒரு நாள்!…

சத்தியமாய் சொல்கிறேன்!…

உயிரே…
உன்னை மறப்பது
மரணத்திலும் முடியாதுடா!!!!!…

Wednesday, July 30, 2008

ஒரு நேசம் முடிவுற்றது!!!!

ஒரு மழைக்காலத்திற்கு
முன்னதாக
நிகழ்ந்திருந்தது நம் சந்திப்பு!

கள்ளங் கபடமில்லாத
சின்ன சின்ன உணர்வுகளை கொண்டு
கடற்கரையோரத்தில்
மணல் வீடு கட்டும்
இரண்டு குழந்தைகளாய்
மிக மெதுவாய் கட்ட ஆரம்பித்தோம்...
நம்மிடையே ஒரு நேசத்தை!

ஆரம்பித்த மழைக்காலத்தின் ஈரங்களில்,
விரும்பி முளைக்கும்
ஒரு விதை போல்
வளர ஆரம்பித்திருந்தது
பெயரில்லா அந்நேசம்!

மழைக்காலத்திற்கு பிந்தைய
வறண்ட நாட்களில்
காரணங்களே சொல்லாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
சிறகொடிக்க ஆரம்பித்தாய்!...
உன் மீதான என் நேசங்களை!

சின்னஞ்சிறு ஏமாற்றங்கள்....
சில பல நிராகரிப்புகள்....
என்னிதயம்
தாங்கி கொள்ள முடியா வலிகள்...
என
என்னென்ன உன்னால் முடியுமோ...
அத்தனையும் தந்து வேரறுத்தாய்!

என்னை...
என் உணர்வுகளை...
என் கனவுகளை...
என் நேசங்களை...
அத்தனையும்!

நீ என் நெஞ்சில் தைத்த
அழகான தேவதை முள்!
அதனால் தான்
என்னால் உன்னை
எடுத்தெறிந்துவிட முடியவில்லை!...
எடுத்தெறியவும் விருப்பமில்லை!

ஆனால்...
நான் உன் செருப்பில் தைத்த
முள் போலும்!...
அலட்சியமாய்
என்னை எடுத்தெறிந்து விட்டாய்!...
உனக்கு கொஞ்சமும் வலியில்லாமல்!

உன்னிலிருந்து
பிரித்தெறியப்பட்ட
உனக்கான என் நேசம்...
கொஞ்ச காலம் துடிதுடித்து பின்
தன்னைத் தானே அழித்துக்கொண்டது!

இதோ அடுத்த மழைக்காலம்
ஆரம்பிக்க போகிறது!...
முடிவென்பதேயில்லை
என்ற கனவுகளோடு
உயிர்த்த ஒரு நேசம் முடிவுற்றது!!!

Tuesday, July 22, 2008

அன்பின் அர்த்தங்கள்!

அன்பின் அர்த்தங்களை
வாழ்வின் எல்லை வரை சென்று
தேடி யாசித்தாலும்
ஏனோ அர்த்தமற்ற உறவுகள் மட்டுமே
கண்ணில் தெரிகின்றன!

ஒவ்வொரு காலை துயிலெழும் போதும்
இன்றாவது வாழ வேண்டும் என்று தான்
ஆசை தோன்றுகிறது!...
ஆனால்...
அரிதாரம் பூசிய
இந்த மானிட கானகத்தில்
உண்மை மனிதத்தை
எங்கு தேடி காண்பது!?....

சுயநலம் பிடித்த
இந்த மானுட தேசத்தில் இருந்து
என்று விடைக் கிடைக்குமோ!?

சுயநல பேய்களின்
இரும்பு பிடியில் சிக்கி
பொறாமை தீயில் வெந்து
அர்த்தமிழந்து போகின்றன
அன்பின் அர்த்தங்கள்!

ஏதோ சில சமயங்களில்
மயிலிறகாய் வருட
நட்பு கைக்கோர்க்கும் போது
அங்கும் நம்பிக்கைகள்
நீர்த்துப் போகின்றன!

தனிமையில்
கொஞ்சம் வாழ்ந்து பார்க்க நினைத்தால்
அங்கு உறவு கைக்கட்டி
கேலி செய்கிறது!

மரணம் ஒன்றிலாவது
என்னை தொந்தரவு செய்யாதீர்கள்!...
அடுத்த ஜென்மம் ஒன்றிலாவது
பிறவியேயில்லாத பிறவி கேட்கிறேன்!
அது வரை நிம்மதியாய்
கொஞ்சம் தூங்கிக் கொள்கிறேன்!!!

பிரிவு!

பார்த்து இருந்தது
பத்து நிமிடங்கள்!
மௌனமே வார்த்தையாக
பேசின நம் கண்கள்
பரிமாற மொழிகள் கிடைக்கவில்லை!...
அதற்கான அவசியமும் புரியவில்லை!

உன்னை விட்டு போக
மனம் இல்லை!
சிலையாக நிற்பதை தவிர
வேறு வழி இல்லை!

என்ன பேசுவது...
எப்படி பேசுவது...
என்ற குழப்பம்!

குழப்பத்திலே கரைந்து போனது
பத்து நிமிடம்!

பிரியா விடை பெற்று
பிரிந்து சென்றோம்!
திரும்பி திரும்பி பார்த்தபடி
போனோம்!

கால்கள் முன்னோக்கி நகர...
மனமோ பின்னோக்கி நகர...
நடந்தோம்!...
உயிர் அற்ற உடலாக...

தற்காலிக பிரிவில்
இத்தனை வருத்தமா!?...
எனக்குள்ளே அதிசயமான மாற்றமா!?...
புரியவில்லை ஒன்றும் எனக்கு!

சுழல விட்டாய்...
என்றும் உன் நினைவோடு!

சிக்கல்களை உண்டாகி விட்டாய்...
என் மனதோடு!

எப்போது பார்ப்பேன்
மறுபடி உன்னை!?...

எனக்கே அறியாமல்
தந்து விட்டேன் என்னை!!!

என்னவளே!......

என்ன யோசிக்கிறாய்!?...
உனக்காய் நான் எழுதுவதை இன்னும்
என் பேனா நிறுத்தவில்லையென்றா?...

ஆமாம்!...
அதைத்தான் நானும்
யோசிக்கிறேன்!

உனக்கு தெரியுமோ தெரியாது...
ஏன் என் கவிதைகளில் எழுத்து
பிழைகள் அதிகமென்று!

ஏன் தெரியுமா!?...
என் கவிதைகளை
நான் வாசிப்பதில்லை!
வாசித்தால்
ஏன் எழுதக் கற்றுக்கொண்டேன்
என்பதை படித்துக்
கவலைப்படுவேன் என்பதால்தான்!

பேனா எடுத்தவர் யாரும்
பேனாவால் இறந்ததில்லை!
நான் மட்டும்தான் உனக்காய்
எழுதி எழுதி இறந்துகொண்டிருக்கிறேன்!

இந்த உலகம் கவலைப்படுகிறது!
உனக்காக மட்டும்தான் எழுதுகிறேன்என்று...
உண்மைதான்
அதற்காக நான்அதிகம் வருத்தப்படுவதுண்டு!
ஆனால் அவர்களுக்கு எப்படி
புரியவைப்பேன்!?...
நான் உன்னக்காய் எழுதுவதில்லை...
உன்னால்தான் எழுதுகிறேன் என்று!!!

உன்னைக் காதலித்தது
மட்டும்தான் நான்...
உன்னைக் கற்றுக்கொண்டது
என் பேனாதான்!!!
இல்லையென்றால்..
நான் சொல்வதைக் கேட்டு
எழுதுவதை எப்போதோ
நிறுத்தியிருக்கும்!

நீ என்னைக் காதலித்த
காலங்களை விட - உன்னால்
என்னை மட்டும் காதலித்துக்கொண்டேயிருக்கும்
பேனாவின் காலங்கள்தான் அதிகம்!

இதனால்தான் சொன்னார்களோ!?...
காதலித்தவள் கிடைக்கவில்லையென்றால்
கிடைத்ததை காதலியென்று!....

பேனா பாவம் பொல்லாதது தான்
ஆனால் அதைவிட பெண்பாவம்
பொல்லாதது!
அதனால்தான்
என் பேனா என் இதயத்தை
கிழித்தபோதும்....உன் பெயர்
சொல்லித் துடித்துக்கொண்டிருந்தேன்!

என் கவி ரசிகைகளை விட
என் பேனா தான் உன் மேல்
அதித பொறாமைப் படுகிறது!....
ஏன் தெரியுமா!?...
தான் இவ்வளவு
ரசிகர்களையும்
பெருமைகளையும்
சேர்த்து தந்தும்
தன்னைக் காதலிக்காமல்
உன்னை மட்டும்
நான் காதலித்துக் கொண்டேயிருப்பதால்!.....

உண்மையை சொல்லப் போனால்
என் பேனாவிடம் இருந்து தான்
உன் பழக்கங்களை தெரிந்து கொண்டேன்!

இப்பொழுதெல்லாம்
பேனா எழுத ஆரம்பித்தால்
நான் எதுவும் பேசுவதில்லை!
பேசி பிடிவாதத்தால் வலிக்க போவது
என் கை என்பதால்!

இருந்தாலும் ராசியான
கவிஞர்களில் நானும் ஒருவன்!!!!

என் பெற்றோர்களுக்கும்
எழுதப் படிக்க தெரியாது!

என்னவளே வா!....
உனக்காய் எழுதி எழுதி
என் பக்கங்களை காயப்படுத்தும்
என் பேனாவை பறித்துவிட்டுப் போ!
இல்லையேல்
என் கைகளையாவது
முறித்துவிட்டு போ!

எல்லாம்
உன் கையில் தான்
இருக்கிறது!வா!!!!!!.....

காதல்...!

புரியும் முன்....

இன்பங்களின் எல்லை!
கனவுகளின் உலகம்!
நினைவுகளின் கோர்வை!

புரியும் போது.....
நிஜங்களின் நிழல்!
கற்பனைகளின் உயிர்!
இனிய அவஸ்தை!

புரிந்த பின்.....

கண்ணீரின் மறு பெயர்!
வலிகளின் உறைவிடம்!
வேதனைகளின் தோட்டம்!

உன் நினைவே பொக்கிஷம்!


உனது “மறந்து விடு!” என்ற
ஒரு வார்த்தையை மட்டும்
ஏனோ கேட்க மறுக்கிறது
என் மனது!…

ஒரு வேளை
நீ எதை சொன்னாலும் கேட்கும் மனது,
உனது இந்த வார்த்தையையும் கேட்டு விட்டால்…
இப்படி எல்லாம்
அவஸ்தைப் படத் தேவையில்லை தான்!…

ஆனால்...
பாவி மனசுக்கு அது தெரியவில்லையே!...…
அடம் பிடிக்கிறது...
“மறப்பேனா உன்னை!?” என்று...

எத்தனை முறை தான் சொல்லுவது!!??...

வார்த்தைகள் கத்தியாகி,
உள்ளத்தைக் கிழித்து,
காயப் படுத்தி,
ரணமாக்கிய போதும்
உனது நினைவுகள்
பொக்கிஷமாய்த் தான்
பொத்தி வைக்கப் படுகின்றன…
என் மனதினுள்ளே!!!...

உனது நினைவுகளில் தான்....

உன் காதல் பொய்யாக இருக்கலாம்!...
நீ சொன்ன வார்த்தைகள் பொய்யாக இருக்கலாம்!...
உனது நேசம் வேஷமாக இருக்கலாம்!...
ஆனால்...
நான் உன் மீது கொண்ட காதல் நிஜம்!
உன்னையே உயிராய் நினைத்தது நிஜம்!
உனக்காக உறவுகளை வெறுத்தது நிஜம்!

உண்மைக் காதல் பிரியாது என்பார்கள்
நான் உன் மீது கொண்டது
உண்மையான காதல் தானே!?...
பின் எப்படி எனை நீ பிரிந்தாய்!!??......

"காதலித்துப் பார்!...
கவிதை வரும்!"
என்று வைரமுத்து சொன்னார்!
ஏனோ உனது பிரிவில் தான்
கவிதை வருகிறது எனக்கு!!!

உன் பார்வையில்
பூத்துக் குலுங்கிய நான்...
உன் பிரிவில்
சருகாகிப் போனேன்!

உனது நினைவுகளில் தான்
என் இதயம் இன்னமும்
துடித்து கொண்டிருக்கிறது!
மறந்து விடச் சொல்லாதே!...
இறந்து விடுவேன் நான்!!!

சொல்லி விடு!

உனக்கு என் கவிதைகளின்
அர்த்தம் தான் புரியவில்லை
என்று நினைத்திருந்தேன்!...
ஆனால்
இப்போது தான் தெரிகிறது
உனக்கு புரியாதது
என் கவிதைகள் மட்டுமல்ல
என் காதலும் தான் என்று!

பெண்ணின் மனம் தான் ஆழம் என்பார்கள்!...
உன் மனம் கூட ஆழம் தானடா!
காதலெனும் முத்தை
உன் மனமெனும் கடலிலிருந்து
எடுக்க முடியவில்லையே என்னால்!!!

நீ முறைக்கும் போதும்
அழகாய்த் தெரிகிறாய்!
திட்டும் போதும்
இதமாய் இருக்கிறது!

அன்று திட்டினாயே...
"பைத்தியம்!" என்று...
உண்மை தான்!
உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
பைத்தியம் தான் நான்!!!

என் மனது
இன்னமுமா உனக்குப் புரியவில்லை!?
அல்லது புரிந்தும் நடிக்கிறாயா???

உன் நடிப்பைத் தாங்கும் சக்தி
இனி மேலும் எனக்கு இல்லை அன்பே!

ஒரு முறை...
ஒரே ஒரு முறை...
உன் இதழ் திறந்து சொல்லி விடு!
நீ என்னை நேசிப்பதாய் அல்ல.....
நீ என்னை நேசிக்கவில்லை என்றாவது!...

முடிவு தெரியாமல்
தடுமாறும் கதையாய்
என் கதையும் ஆவதில்
எனக்கு விருப்பம் இல்லையடா!!!

வலிக்கிறது!

எனக்கு ஏமாற்றம்
உன்னால் மட்டும் தான் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன்!...
ம்....
இதில் கூட
என் கணிப்பு தவறிப் போனது!

எதிரினில் நின்றால்
உன்னையே காட்டும்
கண்ணாடி!...

உன்னைத் தவிர
எதையும் எழுதத் தெரியாத
என் பேனா!...

கனவுகளை மட்டும்
பொத்தி வைக்கும்
இதயம்!...

வதைக்கும் நினைவுகளை
மீண்டும் மீண்டும் அசை போடும்
மனது!...

நீ மறுத்த போது வலித்ததை விட
அதிகமாய் வலிக்கிறதுடா!

காதலித்தால்
கையெழுத்து அழகாகும்
என்பதென்னவோ உண்மை தான்!...
ஆனால்
தலையெழுத்து தான்
சிதைந்து போகும்!!!

இருந்தாலும்
எனக்கொரு சந்தேகம்!...
என் தலையெழுத்து
சிதைந்து மட்டும் தான் போனதா!?...
இல்லை ஒரேயடியாக
அழிந்தே போய் விட்டதா!!!???...

இதயத்தினுள் பறந்த
ஆயிரம் பட்டாம் பூச்சிகளையும்
உன் ஒரே வார்த்தையில்
பொசுக்கி விட்டாயே!...

புன்னகைகளை எனக்குப்
பரிசளித்த நீயே
என் இன்பங்களைப்
பறித்துக் கொண்டாயே!....
இது எந்த விதத்தில் நியாயம்????
சொல் அன்பே!!!???.......

Friday, July 11, 2008

உயிரே!

உன் பார்வையில்
துடித்த இதயத்தை
ஒரே வார்த்தையில்
நிறுத்தி விட்டாய்!

ஒரே நாளில்
தோற்றுப் போனேன்...
என் வாழ்க்கையை!!!

இறந்து விடத் தான் தோன்றியது!
ஏனோ முடியவில்லை
என் முச்சு நின்று விட்டால்
என்னுள் இருக்கும் நீ
எதை சுவாசிப்பாய் என்ற
தயக்கம் தான் காரணம்!

உன் ஒவ்வொரு புன்னகைகளாய்
சேர்த்து கட்டிய
என் காதல் மாளிகையை
ஒரே ஒரு வார்த்தையில்
நொறுக்கி விட்டாய்!

உனக்கு ஒன்று தெரியுமா!?....
இது வரை நான் எழுதிய
கவிதைகள் அனைத்தும்
என் கற்பனை மட்டும் தான்!
ஆனால்
இந்த கவிதை மட்டும்
உணர்ந்து...
என் உணர்வுகளை பிழிந்து
எழுதியது!

முதல் முதலாய்
வலிகளின் ஆழத்தையும்
வேதனைகளின் வேகத்தையும்
அறிந்து கொண்டேன்...
உன்னால்!
அதற்காக உனக்கு என் நன்றிகள்!

உன்னை மட்டுமே
நினைக்கத் தெரிந்த
என் மனதிற்கு
இப்போதெல்லாம்
என்ன செய்வது
என்றே தெரியவில்லை....

நண்பனாய் தான்
என் வாழ்வில் வந்தாய்!
எப்போது உன்னிடம்
என்னைத் தொலைத்தேனோ...
இன்று வரை தெரியாது!

மன்னித்து கொள்!
நண்பனிடம் காதல் வளர்த்தது
தப்பு தான்!...
அதற்காக இவ்வளவு
பெரிய தண்டனையை எல்லாம்
என்னால் தாங்க முடியாதுடா!...

சின்னதாய் கத்தி வெட்டினாலே
துடித்து போய் விடுவேன் நான்.....
ஆனால் இப்போது
வார்த்தை அம்புகளால்
என் இதயத்தை சிதைக்கிறாய்!.....
உயிரே!
நிஜமாய் வலிக்கிறது....

Sunday, June 29, 2008

தூரம்!...

உனக்கும் எனக்குமான தூரத்தை
இதுவரை நான்
கணக்கிட்டதில்லை!...
அதுதான்
உன்னை நினைக்க
ஆரம்பித்த மாத்திரத்தில்
சட்டென என் இமைகளுக்கிடையில்
இடம் பெயர்ந்து விடுகிறாயே!.....

Saturday, June 28, 2008

சொல்!...

மறந்து விடுங்கள் என்றாய்!...
இதயத்துக்கு நான் சொல்லி விட்டேன்!
இயற்கைக்கு நீ சொல்வாயா?...

பாழாய் போன இயற்கை
படுத்துகிறதே பெண்ணே!

பூமிக்கு வெளிச்சம்!
ஒ!...
நீ கண் திறந்த விட்டாய்!

இருட்டு கட்டு குலைந்தது!
புரிகிறது
அவிழ்ந்த கூந்தலை
அள்ளி முடிகிறாய்!

பூவில் பனித்துளிகள்!
இது கூட தெரியாதா?
முகம் கழுவுகிறாய்!

கடல் கொப்புளித்துக்
கரைகளில் நுரைகள்!
நீ பல் துலக்குகிறாய்!

எங்கோ ஒரு மின்னல் மின்னி
எவருக்கும் தெரியாமல் மழை பெய்கிறது!
குளிக்கிறாய்!
கோதை நீ குளிக்கிறாய்!

நனைந்த மரங்களை
காற்று துவட்ட
தீர்த்தம் தெறிக்கிறது!
தங்கமே...
நீ தலை உலர்த்துகிறாய்!

திடீரென்று பூமி எல்லாம் பூக்கள்!
எப்படி?
உன் புடவை மடிப்புகள்
பூமியை தொடுகின்றன!

மத்தியானம் என்ன இருட்டு!?
பாவை உனக்கு பகல் தூக்கம்!

சூரியன் சாய்கிறான்!
ஒ!
நீ புரண்டு படுக்கிறாய்!

மேற்கில் ஒரு வண்ண கலாசாலை!
அறிந்து கொண்டேன்!
நீ ஆடை மாற்றுகிறாய்!

கடலோடு செவ்வானம்!
அட!
தேநீர் கோப்பையில் உன் உதடுகள்!

இரவில் இரண்டே இரண்டு விண்மீன்கள்!
ஒ!
நீ மட்டும் என் கவிதை படிக்கிறாய்!

தென்றல் ஏன் நின்றுவிட்டது!?
நீ இமைக்கவில்லை...
உறங்கிவிட்டாய்!

இப்படியாக...
இயற்கை என்னை கடக்கும் போதெல்லாம்
நீ தான்...
நீ தான் நினைக்கப் படுகிறாய்!

சொல்!
நீ என்னை நினைப்பது எப்போதடி!?
ஏதாவது இறுதி ஊர்வலம்
உன்னை கடக்கும் போதா????

BY: வைரமுத்து

வாசித்ததில் நேசித்தது!

உன்னால் கவிஞன் ஆனதிலிருந்து
உனக்காக எழுதி எழுதி
என் ஆயுளைக்
குறைத்துக் கொண்டத்து தான் மிச்சம்!

நீ என்னை
புரிந்து கொண்டதுமில்லை!...
இனியும் புரிந்து கொள்வாய் என்ற
நம்பிக்கையும் இல்லை!!!

நீ என்னை வாசித்ததில் தான்
தவறு என்று எண்ணியிருந்தேன்!...
இப்போது தான் புரிகிறது...
உனக்கு தெரிந்த மொழியில்
நானிருக்கவில்லையென்று!!!

என்னை உனக்கு
விளங்கப்படுத்திக் கொண்டேயிருக்க
என் ஆயுளை உனக்காக
கரும்பலகையாக்க முடியாது!

பொறுமைக்கும்
எல்லை இருக்கிறது!
தண்ணீர் கூட மூன்று
தடவைக்கு மேல் பொறுக்காது!
நான் எத்தனை ஆண்டுகள் பொறுப்பது
நீ என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று!?...

போதும்
இது வரை உனக்காக
கவிதையோடு
நான் காத்திருந்தது!

நான் ஒன்றும்
உன் பாலர் ஆசிரியர் அல்ல!...
நீ எதை எறிந்தலும்...
நீ எதை செய்தாலும்...
அதை பொறுத்துக் கொண்டு
கற்றுக் கொடுக்க!

போதும்!...
இதுவரை என் கவிதைகளால்
என்னை ஒரு கிறுக்கன்
என்று நினைத்து
நீ சிரித்தது!

ம்ம்.....
என்ன மறுபடியும் சிரிக்கிறாயா?
சிரி!... சிரி!...
ஆசை தீர சிரி!...

இது தான் நீ
என்னை நினைத்து சிரிக்கும்
கடைசி சிரிப்பு!

ஏன் தெரியுமா!?...
நன்றிக்கடனுக்காய்
இது வரை உனக்கு மட்டுமே
கவிஞனாக இருந்த நான்...
இன்று முதல்
இந்த உலகத்துக்கு மட்டுமே
கவிஞனாக இருக்க போகிறேன்!!!

என்ன கவலைப் படுகிறாயா!?
கவலைப் படாதே!
இனி உனக்காக
என் பேனா தலை குனியாது!
இது உறுதி!!!!!

என் கவிதையில்
உன்னை அழகாய்
உக்கார வைத்த நானே...
உனக்கு அர்த்தங்கள் புரியாததால்
இந்த கவிதையோடு
உன்னை மறந்துவிடுகிறேன்!

என்னை மன்னித்துவிடு!!!!!!!

கலையாத என் கனவுகள்!!!

நான் வடிக்கும் கவிதைகளில்
என்றென்றும் நீ இருப்பாய்!
ஏனெனில் உன்னை அறிந்த பின்பே
காதல் என்னும் உலகத்தில்
நான் புகுந்தேன்....
என் சிந்தையில் கலந்த
உன் உணர்வுகளும்
கற்பனைகளுமே
கவிதைகளாயின....

என்னை விட்டு
நீ விலகும் போதெல்லாம்
நான் மரணத்தின் வாசலில்
இருப்பதை உணர்கின்றேன்!...

நான் எதிர்காலத்தில்
பூத்துக் குலுங்கும்
சேலையென நினைத்தேன்!...
ஆனால் நிகழ்காலத்தில் உதிரும்
பூவாகி விட்டேன்!

சிப்பி அழிந்தாலும்
முத்து அழியாது!...
நான் மறைந்தாலும்
உன் மீது நான் கொண்ட காதல்
என்றும் அழியாது!

என் இதயம் என்றென்றும்
உனக்கு சொந்தமே...
உன் நினைவுகளிலே
என் வாழ்க்கை....

வாடாத என் கவிதைகள்
கூற வேண்டும் உன்னிடத்தில்...
கலையாத என் கனவுகளை!!!

உன் புன்னகைகள்!......

சிந்திய சிரிப்புகளையெல்லாம்
சேமித்து வைத்திருந்தேன்!.....
இரண்டு வருட சேமிப்பை
எடுத்துப் பார்க்கிறேன்.....
எதிலுமே என் பெயரில்லை!....

என் பக்கத்தில் நின்றவர்களைப்
பார்த்து சிரித்தது பல....
என் முன் நின்றவர்களுக்காய் சில....
பின் நின்றவர்களுக்காய் சில.....
எவரையோ எண்ணியபடி
எனைப் பார்த்து
சிந்தியவை சில........
எல்லாவற்றையும் கழித்த போது
எஞ்சியவை எனக்காக
சில ஏளனப் புன்னகைகள்.......

என் மனக்காயங்களுக்கு-அவை
மருந்தா இல்லை
திராவகமா தெரியவில்லை!
ஆனாலும் அள்ளி அள்ளிப்
பூசிக்கொள்கிறேன்......

இதயத்தில் உன் பெயரையும்....
உயிரில் உன் முகவரியையும்.....
சுமந்தபடி!...

Friday, June 27, 2008

இறக்க முடியாத சிலுவை!...

சொன்னவள் நான் தான்!

"உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்!"
என்று சொன்னவள் நான் தான்!

"உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை!"
என்று சொன்னவள் நான் தான்!

"உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்!"
என்று சொன்னவள் நான் தான்!

"நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்...
வானம் நட்ஷத்திரங்களையும்...
அட்ஷதை போடும்!"
என்று சொன்னவள் நான் தான்!

"நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!"
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!

இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும்
சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும்
தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன
என் தாய்!

தான் பூப்பெய்திய
செய்தி கூட
புரியாத
என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும்
என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும்
என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு
போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

BY: வைரமுத்து

புலம்பல்! (படித்ததில் பிடித்தது)

இருப்பவனுகோ
வந்து விட ஆசை!
வந்தவனுக்கோ
சென்று விட ஆசை!

இதோ அயல் தேசத்து
ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அழைப்புகளோடும்
வருகின்ற கடிதங்களை நினைத்து
பரிதாப படதான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்!...
ஆனால் வாழ்க்கையில்?.......

தூக்கம் விற்ற காசில் தான்
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே
இளமையை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்
ஓரு விமான பயணத்தினூடே
விற்று விட்டு
கனவுகள் புதைந்துவிடுமென தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கின்றோம்!!!

மர உச்சியில் நின்று
ஓரு தேன் கூட்டை கலைப்பவன் போல...
வார விடுமுறையில் தான்
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!...
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!!!

பழகிய வீதிகள்...
பழகிய நண்பர்கள்...
கல்லூரி நாட்கள்...
தினமும்
ஓரு இரவு நேர கனவுக்குள்
வந்து வந்து காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்!...
மாட்டுவண்டி பயணம்!...
நோன்புநேரத்து கஞ்சி!...
பம்பரம்-சீட்டு-கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!...
ஓவ்வொரு ஞாயிற்று கிழமையாய்
எதிர்பார்த்து விளையாடி மகிழ்ந்த
உள்ளூர் உலககோப்பை கிரிக்கெட்!...

இவைகளை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்
விசாவும் பாஸ்போட்டும் வந்து
விழிகளை நனைத்து விடுகிறது!!!....

வீதிகளில் ஓன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில்
மாப்பிள்ளை அலங்காரம்!...
கூடி நின்று கிண்டலடித்தல்!

கல்யாண நேரத்து பரபரப்பு!...
பழைய சடங்குகள்!...
மறுத்து போராட்டம்!...
பெண் வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!...

சாப்பாடு பரிமாறும் நேரம்
எனக்கு நிச்சயத்தவளின் ஓரப்பார்வை!...
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!...

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்!"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு.....

ஓரு தொலைபேசி வாழ்த்துனூடே
தொலந்து விடுகிறது எங்களின்
நீ......ண்ட நட்பு!!!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?...
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள் தான்!!!

காற்றிலும் கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின், நண்பர்களின்
மரணச் செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும் தான்
ஆறுதல் தருகிறது!.....

இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத் தாண்டிய கண்ணீரிலையே
கரைந்து விடுகிறார்கள்!

இறுதி நாள் நம்பிக்கையில் தான்...
இதயம் சமாதானப்படுகிறது!!!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்!...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்...
முதல் பார்வை...
முதல் பேச்சு...
இவற்றின் பாக்கியத்தை
"றியாழும்", "தினாரும்"
தந்துவிடுமா????

கிள்ளச் சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ????....

ஓவ்வொறு முறை
ஊருக்கு வரும் பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை!...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு!...

இப்படி புதிய முகங்களின்
எதிர் நோக்குதலையும்...
பழைய முகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும் அயல்தேசம் செல்ல மறுத்து
அடம் பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
வீட்டு கஸ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பி விடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!!!!......

உணர்வாயா?.....

குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி
ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை
அடித்தடித்து சொல்லியாயிற்று...
நான் உன்னை நேசிப்பதாய்!

என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று...
உன் மீது நான் கொண்ட நேசத்தை!
இதை புரிவாயா நீ?...

இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும் என்று
என்னை யாரும் கேட்டால்...
என் விழிகள் இரண்டும்
உன்னை நோக்கி கணைகளை வீசும்!
என் சுண்டு விரல் கூட
உன்னை நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்!

எப்போதாவது என் நேசத்தை
புரிந்து கொண்டாயா நீ....?

உனக்கெங்கே
இந்த ஏழையின்
நேசமும், பாசமும்
புரியப் போகின்றது!?...

விடியலுக்கு முந்திய
அந்த இருட்டினிலே
விழி நிறைந்த கனவுகளுடன்
நாம் சிரித்து மகிழ்ந்திருந்த
அந்தக் கணப் பொழுதுகள்
இன்னும் என் உயிரோடு ஒட்டி
உணர்வோடு ஊசலாடிக் கொண்டே இருக்கிறது!

உனக்குள் நான் தொலைந்திருக்கிறேன்!...
இனியாவது தேடிக் கொள்வாயா???

உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல...
உறைந்தே போயிருக்கின்றேன்!
இதை உணர்வாயா நீ?????

ஓர் உண்மை!.....

உன்னை நான்
எப்போது காதலித்தேன்!?...
எதற்காய் காதலித்தேன்!?....
எந்த நிமிடம் காதலித்தேன்!?...
என்று இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது!!!

ஆனால் காதலித்தேன்!
இதுதான் உண்மை!!!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது!

ஆனால் காதலித்தேன்!
இதுதான் உண்மை!!!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய் தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது!

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்!
இதுதான் உண்மை!!!

என்னை நீ மறந்து விடாதே!...
ஏனென்றால் உன் நினைவில் தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்!

இப்போதெல்லாம் நான்
கண் மூடி கனவுக்காய்க்
காத்துக் கிடக்கிறேன்!...
காரணம்
கனவிலாவது என் காதலைச்
சொல்லி விட!

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால் தானோ என்னவோ
என் வசந்தம் இன்னமும்
சாகாமல் இருக்கிறது!

என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்... நான் உன்னைக் காதலிக்கிறேன்!
இதுதான் உண்மை!!!!!!!!!

காதல் உயில்!

உன்னை நான்
பார்த்திரா விட்டால்
என் கவிதை நோட்டு
வெள்ளையாகவே இருந்திருக்கும்!

உன் கூந்தல்
விண்ணப்பித்திரா விட்டால்
என் தோட்டத்தில்
பூச்செடிகள் வைத்திருக்க மாட்டேன்!

உன்னை ஸ்பரிசித்திரா விட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவை
தளிர்களே என்று
தப்பாகச் சொல்லியிருப்பேன்!

உனது
ஒரே பார்வையில்
அரச இலையாக இருந்தவன்
தென்னங்கீற்றாய்க் கிழிந்தேன்!!!

மழையில் நனைந்து
என் ஜன்னலோரம் ஒதுங்கிய
மாலை நேரக்காற்றாய்
உன் சின்னச் சின்ன நினைவுகள்
சில்லிடுகின்றன!!!

கதை பிரசுரமானதும்
தபால்காரனை நேசிக்கும்
ஓர் ஏழை எழுத்தாளனைப் போல்.....
உன் கடிதங்களுக்கு
நான் காத்திருந்ததுண்டு!

உனது முகவரியை
எழுதும் போதெல்லாம்
என் பேனா
தூரிகையாய்
அவதாரம் எடுத்ததுண்டு!

ஒரு மேகத்தைப் போல்
சுதந்திரமாய் இருந்தவனை
ஒரு மழைத்துளியைப் போல்
கைது செய்து விட்டாய்!

உதயகாலம் போன்றவளே
உன் சுவாசம் என்னைச் சுடுகின்ற தூரத்தில்
நாம் நடந்து போன அந்த நல்ல நாட்களில்
நான் தாகங்களால் குடிக்கப்பட்டேன்.......
மௌனங்கள் என்ன பேசின!?.......

என் இனியவளே!
உனக்கு என் நன்றி!
உன் பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால் இந்த இலை
ஒளிச்சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்!!!

காதல் என்னும்
ஒரே சொல்லின் அர்த்தங்களை
நீ தவணை முறையில் விளக்கினாய்!

என் சுவாசங்களை
எனக்கு நீ பரிசளித்தாய்!

என் மனதில் உதிர்ந்த மகரந்தமே
நான் எழுதப்போகும் உயில் இதுதான்...

கார்ல் மார்க்ஸ் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டே
உயிர் விட்ட மாதிரி.......

உன் இமைகளின் நிழலில் இருந்து கொண்டே
நான் என் கடைசிக் காற்றைச்
சுவாசித்து விட வேண்டும்!
அவ்வளவுதான்!!!..........

BY: வைரமுத்து

உன்னால்!?.......

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில்
நிலவின் துணை கொண்டு
எழுதிய கவிதை இது!

தயவு செய்து வாசித்து விடாதே!
உன் கண்ணீரை ஏந்தினால்
என் கவிதை இறந்துவிடும்!!!

காலங்கள் கரைந்தாலும்
கரை சேராத நதியாய்
தேங்கியபடியே கிடக்கிறது
என் காதல்!உன்னால்...

காதல் எனும் வானத்தில்
நாமிருவரும் பறந்து திரிந்த
காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி
தனிமையில் இன்று நான்...

என் காதல்
உன்னை மட்டும்
காதலிக்கக் கற்றுத்தரவில்லை!...
உன்னைத் தவிர
யாரையும் காதலிக்க கூடாது
என்பதையும் தான் கற்றுத் தந்தது!!!

உன் இரவுகளின் தாலாட்டு
எது என்பதை நானறியேன்
ஆனால்
என் ஒவ்வொரு விடியலின் ஓசையும்
என் கவிக் குழந்தையின் அழுகுரல் தான்!

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நீ என்னோடு இருந்தபோது
ஒவ்வொரு நாளும்
புதுப் பக்கங்களாய்
என் வாழ்க்கை இருந்தது என்று...

நீ மறந்திருக்கக் கூடும்...
நான் உன் இதயத்தை காதலால் தான்
வாங்கிக் கொண்டேன் என்பதை!...
ஆனால் நான் மறக்கவில்லை...
நீ வார்த்தைகள் எனும்
அடியாட்களைக் கொண்டு
என்னை அகதியாய் விரட்டி அடித்ததை!

உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும்தான்!
பாவம் அது!...
நான் அழுதால்
உடனே அழ அரம்பிக்கிறது!
இருவரில் யார் அழுதாலும்
உன்னால் குறையப் போவது
எங்கள் இயல்பு தானே!?...

பாவப்பட்டவளின் கைக்கு
விலை போன பேனா
படாதபாடு படத் தானே வேண்டும்!

இன்று என்னை விட
என் பேனா அதிகமாக அழுகிறது!
பாவம்!...
நான் எனக்கிருக்கும் ஒரே உறவை
அழவிட்டு விட்டு
என்ன செய்யப் போகிறேன்!?
எனவே உனக்கு சொல்ல வந்ததை
சொல்லிவிடுகிறேன்!...

இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி...
என்னைக் கொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்!!!...
முடிந்தால்
நான் இறந்த மூன்றாம் நாள் வா!
காதல் சாம்பலோடு
என்னையும் சேர்த்து அள்ளலாம்!!!

புரியவில்லையே....

உன்னை நான் நேசிக்கிறேனா?
புரியவில்லையே....

உன்னுடன் போட்ட சண்டையும்!...
உன்னைத் திட்டிய பேச்சுக்களும்!...
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஏற்பட்ட கோபங்களும்!...
இப்போது காதலாய் மாறிவிட்டதா????
நம்ப முடியவில்லையே........

அடிக்கடி கண்கள்
உன்னைத் தேடுகிறது!
நீ என்னையே பார்ப்பதாய்
இதயம் நினைத்துக் கொள்கிறது!
நீ எதிரினில் வரும் போதெல்லாம்
இறக்கை முழைத்த உணர்வு!
ஏனடா?
ஏனடா இப்படி மாறிப் போனேன்???

புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்!
என்ன முயன்றும்
அதைப் புரிந்து கொள்ளவே
முடியவில்லை!!!
இந்த உணர்விற்கு
என்ன பெயர் சூட்டுவது
என்றும் தெரியவில்லை!!!!

இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்!...
அதன் பின் உன்னை நான்
பார்ப்பேனா என்று கூடத் தெரியாது!
இப்போது எதற்காக இந்த உணர்வு????

பொத்தி வைக்கும் என் கவிதைகள்!....

நீ...
நிலைத்திருக்கும் நிஜம் என்று
நினைத்தேன்!
ஆனால் கலைந்து போகும்
கனவாகிப் போனாய்!...

ஒருமுறை வந்த கனவு
என்றும் மீண்டும் வருவதில்லை!...
ஏனோ நீ மட்டும்
அடிக்கடி கண்முன் தோன்றி
மனதை ரணமாக்குகிறாய்!!!

கலைந்து போனது
கனவு மட்டும் என்றெண்ணினேன்
வாழ்க்கையும் தான் என்று
உணர்த்தியது உன் வார்த்தைகள்!

ஏனடா என்
கனவுக்குள் வந்தாய்?
இப்போது ஏனடா
கலைந்து போகிறாய்???

சுடர் விட்டு ஓளிரும் தீபத்திடம்
காதல் கொண்டு
அதில் எரிந்து போகும்
விட்டில் பூச்சியாகிப் போனேன் நான்!!!!

ஏழு நாள் வாழும்
பட்டாம்பூச்சிக்குக் கூட
அதன் வாழ்க்கையை
ரசிக்கும் உரிமையுண்டு!
உன்னோடு ஏழு ஜென்மம் வரை
வாழ ஆசைப்பட்ட எனக்கு
சிறகிழந்து தவிக்கும்
இந்தத் தண்டனை எதற்காக??..........

உன்னைக் காதலித்த பாவத்திற்காக
காலம் முழுவதும் எனக்கு
விதிக்கப் பட்டது
கண்ணீர் மட்டும் தானா????

இதழ்களில் புன்னகை
விரியும் போதெல்லாம்
இதயத்தில்
ஏனோ வலிக்கிறது!!!

உன் நினைவுகள்
என் காயத்திற்கு மருந்தா இல்லை
அமிலமா என்று தெரியவில்லை!
இருந்தாலும்
அள்ளி அள்ளிப் பூசிக் கொள்கிறேன்!!!!

ஏத்தனையோ தடவை சொல்லியும்
புரிந்து கொள்ளாமல்
விட்டுச் சென்ற உன்னை நினைத்து
வேதனைப்படுவது
முட்டாள்த்தனம் என்று தெரிகிறது!
ஆனாலும் அதைச் செய்யாமல் இருக்க
இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை!!!!

என் வேதனைகளைக் கொட்டி
எழுதிய கவிதைகளைக் கூட
பொத்தி வைக்கிறேன்!
என்றாவது நீ படித்தால்
எனக்காகக் கண்ணீர்
சிந்தக் கூடாது என்பதற்காக!!!............