Monday, August 18, 2008

உன் கவிதை!...

எதுகை மோனையுடன்
வார்த்தைகளில் நளினம் சேர்த்து
பொய்யை மட்டுமே
சொல்வது தான்
கவிதையா!?...

கண்களில்
மின்னல் சிமிட்ட,
பற்களில்
முத்துக்கள் மின்ன,
அழகாய்ப் புன்னகைக்கிறாய்!

உன் போல் கவிதை சொல்ல
யாராலும் முடியாதுடா!...

வலி தான்!
உன் முகம் பார்க்கையில்!…
உன் பெயர் கேட்கையில்!…
உன் புன்னகையை ரசிக்கையில்!...
என்ன வலித்த போதும்
என் மனம் தேடுவதெல்லாம்
உன்னை மட்டும் தான்!
உன்னைப் பார்க்கக் கூடாது
என்று தான் இருப்பேன்...
இமைகள் இரண்டையும்
இறுக்க மூடிக் கொண்டு!...
ஆனால்
நினைவுகளின் கண்கள்
அகலத் திறந்து கொள்கின்றனவே…
வார்த்தைகளால் காயப் படுத்தினாய்!...
இதயம் இமை மூடிக் கதறுகிறது!
கலங்கும் கண்களை
யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு…
விம்மும் நெஞ்சை அழுத்திக் கொண்டு…
அடிக்கடி உளறிக் கொட்டி விடும் வார்த்தைகளை
சமாளித்துக் கொண்டு…
எத்தனை நாள் தான் இருக்க முடியும்!!??...
புதையல் எனப் பொத்தி வைத்த நினைவுகள்
விஷமாகித் தாக்கியதில்
மூச்சுக் காற்றுக்குத் தடுமாறுகிறது இதயம்!...
நிகழ்காலம்
கானலாய்ப் போனதில்…
என் எதிர்காலம்
மாயத் தோற்றமாய் மிரட்டுகிறது!

காதலிக்கும் போது....

என் வேதனைகளை
எதில் கொட்டுவது என்று தெரியாமல்
கவிதைகளாய் கிறுக்கித் தள்ளுகிறேன்….
என் கண்ணீரை என்ன செய்வது!?…

விழி எனும் குளம்
தன் கரைகளை
உடைத்துக் கொள்ளும் போதெல்லாம்
தலையணை மட்டுமே
துணையாகிப் போகிறது!…

பேதை எனக்கு
மெளனமாய் அழத் தான் தெரிகிறது!...
என் மனதை உனக்குப்
புரிய வைக்கத் தெரியவில்லையே!!!

நான் அப்படி என்ன பாவம் செய்தேன்!?...
இப்படி என்னைக் கதற வைக்கிறாயே…

உன்னை உண்மையாய் நேசித்தது பாவமா?...
உன் மீது உயிரையே வைத்தது பாவமா?...
நீ வார்த்தைகளால் கடித்துக் குதறும் போதும்
உன்னை வெறுக்கத் தெரியாதது பாவமா?...
மனக் காயத்தின் வலிகளை மீறி
உனது நினைவுகள் விஸ்வரூபம் எடுப்பது பாவமா?...
எதுடா நான் செய்த பாவம்?????

இதயத்தை உன் புன்னகைகள் தான்
மலர வைத்தது!…
மலர்ந்த என் இதயத்தை
உன் வார்த்தைகள் இன்று எரிக்கின்றது!

என்னுள்ளே கொளுந்துவிட்டெரியும்
உனது நினைவுகளை
அணைக்கும் வழி தெரிந்தும்
அணைக்க மனமில்லாமல் நான்!….

மூடிய இமைகளுக்குள் தோன்றி
முறுவலித்தே வதைக்கிறாய் நீ!...

காதலிக்கவே கூடாது என்று இருந்த என்னை
உன் புன்னகைகள் கலைத்தது!...
நான் வளர்த்த காதலை
உன் வார்த்தைகள் கலைக்க சொல்கிறது!!!…
என்னடா நியாயம் இது!!!???

கொஞ்ச நாட்களாய்
தொண்டையில் சிக்குகிறது உணவு!..
பதறுகிறாள் அம்மா!…
என்னவென்று சொல்வேன் நான்!?

கனவுகள் கலைந்து விடும் என்று
காணும் போது தெரிவதில்லை!…
அதே போல
காணும் கனவுகளோடு சேர்ந்து
வாழ்க்கையும் கலைந்து விடும் என்று
காதலிக்கும் போது தெரிவதில்லை!!!

(என்)அவன்!

நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை
அழகாய்க் கோதிக் கொள்வாய்!...
கோதும் கை பிடித்து நடக்க
ஆசை நெஞ்சை முட்டும்!

அழகாய்த் தான் சிரிப்பாய்!...
ஏனோ எரிச்சலாய் இருக்கும்…
என்னைப் போலவே
எல்லோரும் ரசிப்பார்களே என்று!

இடது கையில் நகம் கடிப்பாய்!...
என்னைப் போலவே!
எவ்வளவு சந்தோஷமாய் இருக்கும் தெரியுமா!?...

அன்று பார்த்தாயே…
ஒற்றைப் புருவம் உயர்த்தி!
நீ என்ன நினைத்துப் பார்த்தாயோ…
நான் பற்றி எரிந்தது உண்மை!

தெரிந்தே
வில(க்)கிச் செல்வாய்!...
வலித்த போதும்
ரசிப்பேன்!

குழந்தை ஒன்றை முத்தமிட்டாய்!
ஏனோ என் கன்னம் சிவந்து போனது!…
கண்ணை மூடி அந்தக் குழந்தையாய்
என்னைக் கற்பனை செய்ததாலா!?...

வார்த்தைகளாய்
காயம் செய்வாய்!...
விசித்திரமான வகையில்
இனிக்கும்!

அலட்சியமாய்
திருப்பிக் கொள்வாய்!...
என் உதடுகள்
எனையறியாமல் புன்னகைக்கும்!

எனக்குப் பிடித்த கருப்பு உடையில்
காற்று கேசம் கலைக்க
மந்தகாசப் புன்னகையுடன் நின்றாயே ஒரு நாள்!…

சத்தியமாய் சொல்கிறேன்!…

உயிரே…
உன்னை மறப்பது
மரணத்திலும் முடியாதுடா!!!!!…