
இன்னும் எத்தனை நாளைக்குத் தான்
இந்த நாடகம்!?...
வலுக் கட்டாயமாய்
உதட்டில் பூசிய புன்னகையும்…
பிடிவாதமாய் இழுத்து வைத்திருக்கும்
அலட்சியப் போக்கும்…
எத்தனை நாளைக்கு!?
உனது திமிரை அடக்குவேன் என்றாய்!...
அதைத் திமிர் என்று
இன்னமும் நான் நினைக்கவில்லைத் தான்
ஆனாலும்
மீண்டும் மீண்டும் விழுந்த அடிகளில்
அனைத்தும் அடங்கி ஒடுங்கிப் போய்விட்டது!
சிறிது சிறிதாய் வளர்த்து விட்ட
நேசம் எல்லாம் வெறும் வேஷம் என்றாய்!...
இதயம் நிறைந்த காதலை
இனக்கவர்ச்சி என்றாய்!...
வார்த்தைகளால் கடித்துக் குதறினாய்!...
அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்!
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி
இறுதியில் முழுவதும் முறித்துக் கொண்டாய்!
“மறந்து விடு!”
இறுதியாய் நீ சொன்ன வார்த்தைகள்!
எவ்வளவோ முயன்றும்
அந்த வார்த்தைகளைக் கூட
மறக்க முடியவில்லையே...
இதில் உன்னை மறப்பதெப்படி!?...
மீண்டும் மீண்டும்
உன் நினைவைத் தூண்டும்
இடமே வேண்டாம் என்று
விலகி வந்தேனே…
இங்கும் எப்படியடா வந்தாய்!?
ஈரிரண்டு வசந்தங்கள்!...
வெறும் பாலைவனமாய்க் கடந்த
ஈரிரண்டு வசந்தங்களின் முன் பார்த்த
அதே மந்தகாசப் புன்னகை!...
அதே மயக்கும் விழிகள்!...
அதே சுடு சொற்கள்!...
உலகம் சிறியது தான்!...
ஆனாலும்
இப்படியா
சுருங்கிப் போக வேண்டும்!?...
சாதாரணமாய் நடிப்பதே
கஷ்டமாய் இருக்கும் போது,
உன்னைப் பார்த்ததும்
கண்ணைக் கரித்துக் கொண்டு வரும்
கண்ணீரை அடக்கி நடிப்பது
நரக வேதனை!
மறக்கத்தான் முடியவில்லை,
ஒதுக்கியாவது வைப்போம் என்று
இதயத்தின் மூலையில் போட்டு வைத்த
உனது நினைவுகள் எல்லாம்
இன்று பேயாட்டம் போடுகின்றன!!!
இதற்க்கு ஒரு முடிவே இல்லையா!?...
விலகவும் முடியாமல்,
விலக்கவும் முடியாமல்
நான் படும் அவஸ்த்தையை
நீ அறியவே மாட்டாயா!?