Sunday, June 29, 2008

தூரம்!...

உனக்கும் எனக்குமான தூரத்தை
இதுவரை நான்
கணக்கிட்டதில்லை!...
அதுதான்
உன்னை நினைக்க
ஆரம்பித்த மாத்திரத்தில்
சட்டென என் இமைகளுக்கிடையில்
இடம் பெயர்ந்து விடுகிறாயே!.....

Saturday, June 28, 2008

சொல்!...

மறந்து விடுங்கள் என்றாய்!...
இதயத்துக்கு நான் சொல்லி விட்டேன்!
இயற்கைக்கு நீ சொல்வாயா?...

பாழாய் போன இயற்கை
படுத்துகிறதே பெண்ணே!

பூமிக்கு வெளிச்சம்!
ஒ!...
நீ கண் திறந்த விட்டாய்!

இருட்டு கட்டு குலைந்தது!
புரிகிறது
அவிழ்ந்த கூந்தலை
அள்ளி முடிகிறாய்!

பூவில் பனித்துளிகள்!
இது கூட தெரியாதா?
முகம் கழுவுகிறாய்!

கடல் கொப்புளித்துக்
கரைகளில் நுரைகள்!
நீ பல் துலக்குகிறாய்!

எங்கோ ஒரு மின்னல் மின்னி
எவருக்கும் தெரியாமல் மழை பெய்கிறது!
குளிக்கிறாய்!
கோதை நீ குளிக்கிறாய்!

நனைந்த மரங்களை
காற்று துவட்ட
தீர்த்தம் தெறிக்கிறது!
தங்கமே...
நீ தலை உலர்த்துகிறாய்!

திடீரென்று பூமி எல்லாம் பூக்கள்!
எப்படி?
உன் புடவை மடிப்புகள்
பூமியை தொடுகின்றன!

மத்தியானம் என்ன இருட்டு!?
பாவை உனக்கு பகல் தூக்கம்!

சூரியன் சாய்கிறான்!
ஒ!
நீ புரண்டு படுக்கிறாய்!

மேற்கில் ஒரு வண்ண கலாசாலை!
அறிந்து கொண்டேன்!
நீ ஆடை மாற்றுகிறாய்!

கடலோடு செவ்வானம்!
அட!
தேநீர் கோப்பையில் உன் உதடுகள்!

இரவில் இரண்டே இரண்டு விண்மீன்கள்!
ஒ!
நீ மட்டும் என் கவிதை படிக்கிறாய்!

தென்றல் ஏன் நின்றுவிட்டது!?
நீ இமைக்கவில்லை...
உறங்கிவிட்டாய்!

இப்படியாக...
இயற்கை என்னை கடக்கும் போதெல்லாம்
நீ தான்...
நீ தான் நினைக்கப் படுகிறாய்!

சொல்!
நீ என்னை நினைப்பது எப்போதடி!?
ஏதாவது இறுதி ஊர்வலம்
உன்னை கடக்கும் போதா????

BY: வைரமுத்து

வாசித்ததில் நேசித்தது!

உன்னால் கவிஞன் ஆனதிலிருந்து
உனக்காக எழுதி எழுதி
என் ஆயுளைக்
குறைத்துக் கொண்டத்து தான் மிச்சம்!

நீ என்னை
புரிந்து கொண்டதுமில்லை!...
இனியும் புரிந்து கொள்வாய் என்ற
நம்பிக்கையும் இல்லை!!!

நீ என்னை வாசித்ததில் தான்
தவறு என்று எண்ணியிருந்தேன்!...
இப்போது தான் புரிகிறது...
உனக்கு தெரிந்த மொழியில்
நானிருக்கவில்லையென்று!!!

என்னை உனக்கு
விளங்கப்படுத்திக் கொண்டேயிருக்க
என் ஆயுளை உனக்காக
கரும்பலகையாக்க முடியாது!

பொறுமைக்கும்
எல்லை இருக்கிறது!
தண்ணீர் கூட மூன்று
தடவைக்கு மேல் பொறுக்காது!
நான் எத்தனை ஆண்டுகள் பொறுப்பது
நீ என்னை புரிந்து கொண்டு வருவாய் என்று!?...

போதும்
இது வரை உனக்காக
கவிதையோடு
நான் காத்திருந்தது!

நான் ஒன்றும்
உன் பாலர் ஆசிரியர் அல்ல!...
நீ எதை எறிந்தலும்...
நீ எதை செய்தாலும்...
அதை பொறுத்துக் கொண்டு
கற்றுக் கொடுக்க!

போதும்!...
இதுவரை என் கவிதைகளால்
என்னை ஒரு கிறுக்கன்
என்று நினைத்து
நீ சிரித்தது!

ம்ம்.....
என்ன மறுபடியும் சிரிக்கிறாயா?
சிரி!... சிரி!...
ஆசை தீர சிரி!...

இது தான் நீ
என்னை நினைத்து சிரிக்கும்
கடைசி சிரிப்பு!

ஏன் தெரியுமா!?...
நன்றிக்கடனுக்காய்
இது வரை உனக்கு மட்டுமே
கவிஞனாக இருந்த நான்...
இன்று முதல்
இந்த உலகத்துக்கு மட்டுமே
கவிஞனாக இருக்க போகிறேன்!!!

என்ன கவலைப் படுகிறாயா!?
கவலைப் படாதே!
இனி உனக்காக
என் பேனா தலை குனியாது!
இது உறுதி!!!!!

என் கவிதையில்
உன்னை அழகாய்
உக்கார வைத்த நானே...
உனக்கு அர்த்தங்கள் புரியாததால்
இந்த கவிதையோடு
உன்னை மறந்துவிடுகிறேன்!

என்னை மன்னித்துவிடு!!!!!!!

கலையாத என் கனவுகள்!!!

நான் வடிக்கும் கவிதைகளில்
என்றென்றும் நீ இருப்பாய்!
ஏனெனில் உன்னை அறிந்த பின்பே
காதல் என்னும் உலகத்தில்
நான் புகுந்தேன்....
என் சிந்தையில் கலந்த
உன் உணர்வுகளும்
கற்பனைகளுமே
கவிதைகளாயின....

என்னை விட்டு
நீ விலகும் போதெல்லாம்
நான் மரணத்தின் வாசலில்
இருப்பதை உணர்கின்றேன்!...

நான் எதிர்காலத்தில்
பூத்துக் குலுங்கும்
சேலையென நினைத்தேன்!...
ஆனால் நிகழ்காலத்தில் உதிரும்
பூவாகி விட்டேன்!

சிப்பி அழிந்தாலும்
முத்து அழியாது!...
நான் மறைந்தாலும்
உன் மீது நான் கொண்ட காதல்
என்றும் அழியாது!

என் இதயம் என்றென்றும்
உனக்கு சொந்தமே...
உன் நினைவுகளிலே
என் வாழ்க்கை....

வாடாத என் கவிதைகள்
கூற வேண்டும் உன்னிடத்தில்...
கலையாத என் கனவுகளை!!!

உன் புன்னகைகள்!......

சிந்திய சிரிப்புகளையெல்லாம்
சேமித்து வைத்திருந்தேன்!.....
இரண்டு வருட சேமிப்பை
எடுத்துப் பார்க்கிறேன்.....
எதிலுமே என் பெயரில்லை!....

என் பக்கத்தில் நின்றவர்களைப்
பார்த்து சிரித்தது பல....
என் முன் நின்றவர்களுக்காய் சில....
பின் நின்றவர்களுக்காய் சில.....
எவரையோ எண்ணியபடி
எனைப் பார்த்து
சிந்தியவை சில........
எல்லாவற்றையும் கழித்த போது
எஞ்சியவை எனக்காக
சில ஏளனப் புன்னகைகள்.......

என் மனக்காயங்களுக்கு-அவை
மருந்தா இல்லை
திராவகமா தெரியவில்லை!
ஆனாலும் அள்ளி அள்ளிப்
பூசிக்கொள்கிறேன்......

இதயத்தில் உன் பெயரையும்....
உயிரில் உன் முகவரியையும்.....
சுமந்தபடி!...

Friday, June 27, 2008

இறக்க முடியாத சிலுவை!...

சொன்னவள் நான் தான்!

"உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்!"
என்று சொன்னவள் நான் தான்!

"உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை!"
என்று சொன்னவள் நான் தான்!

"உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்!"
என்று சொன்னவள் நான் தான்!

"நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்...
வானம் நட்ஷத்திரங்களையும்...
அட்ஷதை போடும்!"
என்று சொன்னவள் நான் தான்!

"நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!"
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!

இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும்
சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?...

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும்
தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன
என் தாய்!

தான் பூப்பெய்திய
செய்தி கூட
புரியாத
என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும்
என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும்
என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?...

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு
போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

BY: வைரமுத்து

புலம்பல்! (படித்ததில் பிடித்தது)

இருப்பவனுகோ
வந்து விட ஆசை!
வந்தவனுக்கோ
சென்று விட ஆசை!

இதோ அயல் தேசத்து
ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அழைப்புகளோடும்
வருகின்ற கடிதங்களை நினைத்து
பரிதாப படதான் முடிகிறது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்
வாசனை இருக்கலாம்!...
ஆனால் வாழ்க்கையில்?.......

தூக்கம் விற்ற காசில் தான்
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே
இளமையை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்
ஓரு விமான பயணத்தினூடே
விற்று விட்டு
கனவுகள் புதைந்துவிடுமென தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கின்றோம்!!!

மர உச்சியில் நின்று
ஓரு தேன் கூட்டை கலைப்பவன் போல...
வார விடுமுறையில் தான்
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!...
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!!!

பழகிய வீதிகள்...
பழகிய நண்பர்கள்...
கல்லூரி நாட்கள்...
தினமும்
ஓரு இரவு நேர கனவுக்குள்
வந்து வந்து காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்!...
மாட்டுவண்டி பயணம்!...
நோன்புநேரத்து கஞ்சி!...
பம்பரம்-சீட்டு-கோலி என
சீசன் விளையாட்டுக்கள்!...
ஓவ்வொரு ஞாயிற்று கிழமையாய்
எதிர்பார்த்து விளையாடி மகிழ்ந்த
உள்ளூர் உலககோப்பை கிரிக்கெட்!...

இவைகளை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம்
விசாவும் பாஸ்போட்டும் வந்து
விழிகளை நனைத்து விடுகிறது!!!....

வீதிகளில் ஓன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில்
மாப்பிள்ளை அலங்காரம்!...
கூடி நின்று கிண்டலடித்தல்!

கல்யாண நேரத்து பரபரப்பு!...
பழைய சடங்குகள்!...
மறுத்து போராட்டம்!...
பெண் வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!...

சாப்பாடு பரிமாறும் நேரம்
எனக்கு நிச்சயத்தவளின் ஓரப்பார்வை!...
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!...

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும்!"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு.....

ஓரு தொலைபேசி வாழ்த்துனூடே
தொலந்து விடுகிறது எங்களின்
நீ......ண்ட நட்பு!!!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?...
நாங்கள் அயல்தேசத்து ஏழைகள் தான்!!!

காற்றிலும் கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின், நண்பர்களின்
மரணச் செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும் தான்
ஆறுதல் தருகிறது!.....

இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத் தாண்டிய கண்ணீரிலையே
கரைந்து விடுகிறார்கள்!

இறுதி நாள் நம்பிக்கையில் தான்...
இதயம் சமாதானப்படுகிறது!!!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்!...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம்...
முதல் பார்வை...
முதல் பேச்சு...
இவற்றின் பாக்கியத்தை
"றியாழும்", "தினாரும்"
தந்துவிடுமா????

கிள்ளச் சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ????....

ஓவ்வொறு முறை
ஊருக்கு வரும் பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாசப் பார்வை!...
நெருங்கியவர்களின் திடீர்மறைவு!...

இப்படி புதிய முகங்களின்
எதிர் நோக்குதலையும்...
பழைய முகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும் அயல்தேசம் செல்ல மறுத்து
அடம் பிடிக்கும் மனசிடம்...
தங்கையின் திருமணமும்...
வீட்டு கஸ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பி விடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!!!!......

உணர்வாயா?.....

குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி
ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை
அடித்தடித்து சொல்லியாயிற்று...
நான் உன்னை நேசிப்பதாய்!

என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று...
உன் மீது நான் கொண்ட நேசத்தை!
இதை புரிவாயா நீ?...

இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும் என்று
என்னை யாரும் கேட்டால்...
என் விழிகள் இரண்டும்
உன்னை நோக்கி கணைகளை வீசும்!
என் சுண்டு விரல் கூட
உன்னை நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்!

எப்போதாவது என் நேசத்தை
புரிந்து கொண்டாயா நீ....?

உனக்கெங்கே
இந்த ஏழையின்
நேசமும், பாசமும்
புரியப் போகின்றது!?...

விடியலுக்கு முந்திய
அந்த இருட்டினிலே
விழி நிறைந்த கனவுகளுடன்
நாம் சிரித்து மகிழ்ந்திருந்த
அந்தக் கணப் பொழுதுகள்
இன்னும் என் உயிரோடு ஒட்டி
உணர்வோடு ஊசலாடிக் கொண்டே இருக்கிறது!

உனக்குள் நான் தொலைந்திருக்கிறேன்!...
இனியாவது தேடிக் கொள்வாயா???

உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல...
உறைந்தே போயிருக்கின்றேன்!
இதை உணர்வாயா நீ?????

ஓர் உண்மை!.....

உன்னை நான்
எப்போது காதலித்தேன்!?...
எதற்காய் காதலித்தேன்!?....
எந்த நிமிடம் காதலித்தேன்!?...
என்று இன்றும் கூட
எனக்கு எதுவுமே தெரியாது!!!

ஆனால் காதலித்தேன்!
இதுதான் உண்மை!!!

ஏன் காதலித்தாய்?
எதற்காய் காதலித்தாய்?
என்ற உன் வினாக்களுக்கு
எனக்கு விடையும் தெரியாது!

ஆனால் காதலித்தேன்!
இதுதான் உண்மை!!!

உன்னை நான் கேட்டால் - நீ
உன்னை எனக்காய் தருவாயோ...?
இல்லையோ...?
அதுவும் தெரியாது!

ஆனாலும்
நான் உன்னைக் காதலிக்கிறேன்!
இதுதான் உண்மை!!!

என்னை நீ மறந்து விடாதே!...
ஏனென்றால் உன் நினைவில் தான்
நான் இன்னமும்
என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்!

இப்போதெல்லாம் நான்
கண் மூடி கனவுக்காய்க்
காத்துக் கிடக்கிறேன்!...
காரணம்
கனவிலாவது என் காதலைச்
சொல்லி விட!

அந்தச் சந்தோசமான
நினைவுகளினால் தானோ என்னவோ
என் வசந்தம் இன்னமும்
சாகாமல் இருக்கிறது!

என் மனத்திரை விலக்கி
என் மனம் திறந்து
உனக்கு உண்மை ஒன்று சொல்லிடவா?

ம்... ம்... நான் உன்னைக் காதலிக்கிறேன்!
இதுதான் உண்மை!!!!!!!!!

காதல் உயில்!

உன்னை நான்
பார்த்திரா விட்டால்
என் கவிதை நோட்டு
வெள்ளையாகவே இருந்திருக்கும்!

உன் கூந்தல்
விண்ணப்பித்திரா விட்டால்
என் தோட்டத்தில்
பூச்செடிகள் வைத்திருக்க மாட்டேன்!

உன்னை ஸ்பரிசித்திரா விட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவை
தளிர்களே என்று
தப்பாகச் சொல்லியிருப்பேன்!

உனது
ஒரே பார்வையில்
அரச இலையாக இருந்தவன்
தென்னங்கீற்றாய்க் கிழிந்தேன்!!!

மழையில் நனைந்து
என் ஜன்னலோரம் ஒதுங்கிய
மாலை நேரக்காற்றாய்
உன் சின்னச் சின்ன நினைவுகள்
சில்லிடுகின்றன!!!

கதை பிரசுரமானதும்
தபால்காரனை நேசிக்கும்
ஓர் ஏழை எழுத்தாளனைப் போல்.....
உன் கடிதங்களுக்கு
நான் காத்திருந்ததுண்டு!

உனது முகவரியை
எழுதும் போதெல்லாம்
என் பேனா
தூரிகையாய்
அவதாரம் எடுத்ததுண்டு!

ஒரு மேகத்தைப் போல்
சுதந்திரமாய் இருந்தவனை
ஒரு மழைத்துளியைப் போல்
கைது செய்து விட்டாய்!

உதயகாலம் போன்றவளே
உன் சுவாசம் என்னைச் சுடுகின்ற தூரத்தில்
நாம் நடந்து போன அந்த நல்ல நாட்களில்
நான் தாகங்களால் குடிக்கப்பட்டேன்.......
மௌனங்கள் என்ன பேசின!?.......

என் இனியவளே!
உனக்கு என் நன்றி!
உன் பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால் இந்த இலை
ஒளிச்சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்!!!

காதல் என்னும்
ஒரே சொல்லின் அர்த்தங்களை
நீ தவணை முறையில் விளக்கினாய்!

என் சுவாசங்களை
எனக்கு நீ பரிசளித்தாய்!

என் மனதில் உதிர்ந்த மகரந்தமே
நான் எழுதப்போகும் உயில் இதுதான்...

கார்ல் மார்க்ஸ் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டே
உயிர் விட்ட மாதிரி.......

உன் இமைகளின் நிழலில் இருந்து கொண்டே
நான் என் கடைசிக் காற்றைச்
சுவாசித்து விட வேண்டும்!
அவ்வளவுதான்!!!..........

BY: வைரமுத்து

உன்னால்!?.......

உன்னை நினைக்க மறந்த
இரவொன்றில்
நிலவின் துணை கொண்டு
எழுதிய கவிதை இது!

தயவு செய்து வாசித்து விடாதே!
உன் கண்ணீரை ஏந்தினால்
என் கவிதை இறந்துவிடும்!!!

காலங்கள் கரைந்தாலும்
கரை சேராத நதியாய்
தேங்கியபடியே கிடக்கிறது
என் காதல்!உன்னால்...

காதல் எனும் வானத்தில்
நாமிருவரும் பறந்து திரிந்த
காலங்களை எண்ணியபடியே
சிறகுகள் இன்றி
தனிமையில் இன்று நான்...

என் காதல்
உன்னை மட்டும்
காதலிக்கக் கற்றுத்தரவில்லை!...
உன்னைத் தவிர
யாரையும் காதலிக்க கூடாது
என்பதையும் தான் கற்றுத் தந்தது!!!

உன் இரவுகளின் தாலாட்டு
எது என்பதை நானறியேன்
ஆனால்
என் ஒவ்வொரு விடியலின் ஓசையும்
என் கவிக் குழந்தையின் அழுகுரல் தான்!

உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
நீ என்னோடு இருந்தபோது
ஒவ்வொரு நாளும்
புதுப் பக்கங்களாய்
என் வாழ்க்கை இருந்தது என்று...

நீ மறந்திருக்கக் கூடும்...
நான் உன் இதயத்தை காதலால் தான்
வாங்கிக் கொண்டேன் என்பதை!...
ஆனால் நான் மறக்கவில்லை...
நீ வார்த்தைகள் எனும்
அடியாட்களைக் கொண்டு
என்னை அகதியாய் விரட்டி அடித்ததை!

உன்னால் என் தனிமைக்கு மிஞ்சியிருப்பது
என் பேனா மட்டும்தான்!
பாவம் அது!...
நான் அழுதால்
உடனே அழ அரம்பிக்கிறது!
இருவரில் யார் அழுதாலும்
உன்னால் குறையப் போவது
எங்கள் இயல்பு தானே!?...

பாவப்பட்டவளின் கைக்கு
விலை போன பேனா
படாதபாடு படத் தானே வேண்டும்!

இன்று என்னை விட
என் பேனா அதிகமாக அழுகிறது!
பாவம்!...
நான் எனக்கிருக்கும் ஒரே உறவை
அழவிட்டு விட்டு
என்ன செய்யப் போகிறேன்!?
எனவே உனக்கு சொல்ல வந்ததை
சொல்லிவிடுகிறேன்!...

இறந்து போன என் காதலை
எரிக்க மனமின்றி...
என்னைக் கொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்!!!...
முடிந்தால்
நான் இறந்த மூன்றாம் நாள் வா!
காதல் சாம்பலோடு
என்னையும் சேர்த்து அள்ளலாம்!!!

புரியவில்லையே....

உன்னை நான் நேசிக்கிறேனா?
புரியவில்லையே....

உன்னுடன் போட்ட சண்டையும்!...
உன்னைத் திட்டிய பேச்சுக்களும்!...
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்
ஏற்பட்ட கோபங்களும்!...
இப்போது காதலாய் மாறிவிட்டதா????
நம்ப முடியவில்லையே........

அடிக்கடி கண்கள்
உன்னைத் தேடுகிறது!
நீ என்னையே பார்ப்பதாய்
இதயம் நினைத்துக் கொள்கிறது!
நீ எதிரினில் வரும் போதெல்லாம்
இறக்கை முழைத்த உணர்வு!
ஏனடா?
ஏனடா இப்படி மாறிப் போனேன்???

புரியாத உணர்வுகள் கொடுக்கிறாய்!
என்ன முயன்றும்
அதைப் புரிந்து கொள்ளவே
முடியவில்லை!!!
இந்த உணர்விற்கு
என்ன பெயர் சூட்டுவது
என்றும் தெரியவில்லை!!!!

இன்னும் ஈரெட்டு நாட்கள் தான்!...
அதன் பின் உன்னை நான்
பார்ப்பேனா என்று கூடத் தெரியாது!
இப்போது எதற்காக இந்த உணர்வு????

பொத்தி வைக்கும் என் கவிதைகள்!....

நீ...
நிலைத்திருக்கும் நிஜம் என்று
நினைத்தேன்!
ஆனால் கலைந்து போகும்
கனவாகிப் போனாய்!...

ஒருமுறை வந்த கனவு
என்றும் மீண்டும் வருவதில்லை!...
ஏனோ நீ மட்டும்
அடிக்கடி கண்முன் தோன்றி
மனதை ரணமாக்குகிறாய்!!!

கலைந்து போனது
கனவு மட்டும் என்றெண்ணினேன்
வாழ்க்கையும் தான் என்று
உணர்த்தியது உன் வார்த்தைகள்!

ஏனடா என்
கனவுக்குள் வந்தாய்?
இப்போது ஏனடா
கலைந்து போகிறாய்???

சுடர் விட்டு ஓளிரும் தீபத்திடம்
காதல் கொண்டு
அதில் எரிந்து போகும்
விட்டில் பூச்சியாகிப் போனேன் நான்!!!!

ஏழு நாள் வாழும்
பட்டாம்பூச்சிக்குக் கூட
அதன் வாழ்க்கையை
ரசிக்கும் உரிமையுண்டு!
உன்னோடு ஏழு ஜென்மம் வரை
வாழ ஆசைப்பட்ட எனக்கு
சிறகிழந்து தவிக்கும்
இந்தத் தண்டனை எதற்காக??..........

உன்னைக் காதலித்த பாவத்திற்காக
காலம் முழுவதும் எனக்கு
விதிக்கப் பட்டது
கண்ணீர் மட்டும் தானா????

இதழ்களில் புன்னகை
விரியும் போதெல்லாம்
இதயத்தில்
ஏனோ வலிக்கிறது!!!

உன் நினைவுகள்
என் காயத்திற்கு மருந்தா இல்லை
அமிலமா என்று தெரியவில்லை!
இருந்தாலும்
அள்ளி அள்ளிப் பூசிக் கொள்கிறேன்!!!!

ஏத்தனையோ தடவை சொல்லியும்
புரிந்து கொள்ளாமல்
விட்டுச் சென்ற உன்னை நினைத்து
வேதனைப்படுவது
முட்டாள்த்தனம் என்று தெரிகிறது!
ஆனாலும் அதைச் செய்யாமல் இருக்க
இந்த முட்டாளுக்குத் தெரியவில்லை!!!!

என் வேதனைகளைக் கொட்டி
எழுதிய கவிதைகளைக் கூட
பொத்தி வைக்கிறேன்!
என்றாவது நீ படித்தால்
எனக்காகக் கண்ணீர்
சிந்தக் கூடாது என்பதற்காக!!!............