பார்த்திரா விட்டால்
என் கவிதை நோட்டு
வெள்ளையாகவே இருந்திருக்கும்!
உன் கூந்தல்
விண்ணப்பித்திரா விட்டால்
என் தோட்டத்தில்
பூச்செடிகள் வைத்திருக்க மாட்டேன்!
உன்னை ஸ்பரிசித்திரா விட்டால்
உலகில் மிகவும் மிருதுவானவை
தளிர்களே என்று
தப்பாகச் சொல்லியிருப்பேன்!
உனது
ஒரே பார்வையில்
அரச இலையாக இருந்தவன்
தென்னங்கீற்றாய்க் கிழிந்தேன்!!!
மழையில் நனைந்து
என் ஜன்னலோரம் ஒதுங்கிய
மாலை நேரக்காற்றாய்
உன் சின்னச் சின்ன நினைவுகள்
சில்லிடுகின்றன!!!
கதை பிரசுரமானதும்
தபால்காரனை நேசிக்கும்
ஓர் ஏழை எழுத்தாளனைப் போல்.....
உன் கடிதங்களுக்கு
நான் காத்திருந்ததுண்டு!
உனது முகவரியை
எழுதும் போதெல்லாம்
என் பேனா
தூரிகையாய்
அவதாரம் எடுத்ததுண்டு!
ஒரு மேகத்தைப் போல்
சுதந்திரமாய் இருந்தவனை
ஒரு மழைத்துளியைப் போல்
கைது செய்து விட்டாய்!
உதயகாலம் போன்றவளே
உன் சுவாசம் என்னைச் சுடுகின்ற தூரத்தில்
நாம் நடந்து போன அந்த நல்ல நாட்களில்
நான் தாகங்களால் குடிக்கப்பட்டேன்.......
மௌனங்கள் என்ன பேசின!?.......
என் இனியவளே!
உனக்கு என் நன்றி!
உன் பார்வையின் கிரணங்கள்
விழாமலிருந்தால் இந்த இலை
ஒளிச்சேர்க்கை செய்யாமலே
உதிர்ந்திருக்கும்!!!
காதல் என்னும்
ஒரே சொல்லின் அர்த்தங்களை
நீ தவணை முறையில் விளக்கினாய்!
என் சுவாசங்களை
எனக்கு நீ பரிசளித்தாய்!
என் மனதில் உதிர்ந்த மகரந்தமே
நான் எழுதப்போகும் உயில் இதுதான்...
கார்ல் மார்க்ஸ் நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டே
உயிர் விட்ட மாதிரி.......
உன் இமைகளின் நிழலில் இருந்து கொண்டே
நான் என் கடைசிக் காற்றைச்
சுவாசித்து விட வேண்டும்!
அவ்வளவுதான்!!!..........
BY: வைரமுத்து
No comments:
Post a Comment