இதயத்துக்கு நான் சொல்லி விட்டேன்!
இயற்கைக்கு நீ சொல்வாயா?...
பாழாய் போன இயற்கை
படுத்துகிறதே பெண்ணே!
பூமிக்கு வெளிச்சம்!
ஒ!...
நீ கண் திறந்த விட்டாய்!
இருட்டு கட்டு குலைந்தது!
புரிகிறது
அவிழ்ந்த கூந்தலை
அள்ளி முடிகிறாய்!
பூவில் பனித்துளிகள்!
இது கூட தெரியாதா?
முகம் கழுவுகிறாய்!
கடல் கொப்புளித்துக்
கரைகளில் நுரைகள்!
நீ பல் துலக்குகிறாய்!
எங்கோ ஒரு மின்னல் மின்னி
எவருக்கும் தெரியாமல் மழை பெய்கிறது!
குளிக்கிறாய்!
கோதை நீ குளிக்கிறாய்!
நனைந்த மரங்களை
காற்று துவட்ட
தீர்த்தம் தெறிக்கிறது!
தங்கமே...
நீ தலை உலர்த்துகிறாய்!
திடீரென்று பூமி எல்லாம் பூக்கள்!
எப்படி?
உன் புடவை மடிப்புகள்
பூமியை தொடுகின்றன!
மத்தியானம் என்ன இருட்டு!?
பாவை உனக்கு பகல் தூக்கம்!
சூரியன் சாய்கிறான்!
ஒ!
நீ புரண்டு படுக்கிறாய்!
மேற்கில் ஒரு வண்ண கலாசாலை!
அறிந்து கொண்டேன்!
நீ ஆடை மாற்றுகிறாய்!
கடலோடு செவ்வானம்!
அட!
தேநீர் கோப்பையில் உன் உதடுகள்!
இரவில் இரண்டே இரண்டு விண்மீன்கள்!
ஒ!
நீ மட்டும் என் கவிதை படிக்கிறாய்!
தென்றல் ஏன் நின்றுவிட்டது!?
நீ இமைக்கவில்லை...
உறங்கிவிட்டாய்!
இப்படியாக...
இயற்கை என்னை கடக்கும் போதெல்லாம்
நீ தான்...
நீ தான் நினைக்கப் படுகிறாய்!
சொல்!
நீ என்னை நினைப்பது எப்போதடி!?
ஏதாவது இறுதி ஊர்வலம்
உன்னை கடக்கும் போதா????
BY: வைரமுத்து
No comments:
Post a Comment