Wednesday, July 30, 2008

ஒரு நேசம் முடிவுற்றது!!!!

ஒரு மழைக்காலத்திற்கு
முன்னதாக
நிகழ்ந்திருந்தது நம் சந்திப்பு!

கள்ளங் கபடமில்லாத
சின்ன சின்ன உணர்வுகளை கொண்டு
கடற்கரையோரத்தில்
மணல் வீடு கட்டும்
இரண்டு குழந்தைகளாய்
மிக மெதுவாய் கட்ட ஆரம்பித்தோம்...
நம்மிடையே ஒரு நேசத்தை!

ஆரம்பித்த மழைக்காலத்தின் ஈரங்களில்,
விரும்பி முளைக்கும்
ஒரு விதை போல்
வளர ஆரம்பித்திருந்தது
பெயரில்லா அந்நேசம்!

மழைக்காலத்திற்கு பிந்தைய
வறண்ட நாட்களில்
காரணங்களே சொல்லாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
சிறகொடிக்க ஆரம்பித்தாய்!...
உன் மீதான என் நேசங்களை!

சின்னஞ்சிறு ஏமாற்றங்கள்....
சில பல நிராகரிப்புகள்....
என்னிதயம்
தாங்கி கொள்ள முடியா வலிகள்...
என
என்னென்ன உன்னால் முடியுமோ...
அத்தனையும் தந்து வேரறுத்தாய்!

என்னை...
என் உணர்வுகளை...
என் கனவுகளை...
என் நேசங்களை...
அத்தனையும்!

நீ என் நெஞ்சில் தைத்த
அழகான தேவதை முள்!
அதனால் தான்
என்னால் உன்னை
எடுத்தெறிந்துவிட முடியவில்லை!...
எடுத்தெறியவும் விருப்பமில்லை!

ஆனால்...
நான் உன் செருப்பில் தைத்த
முள் போலும்!...
அலட்சியமாய்
என்னை எடுத்தெறிந்து விட்டாய்!...
உனக்கு கொஞ்சமும் வலியில்லாமல்!

உன்னிலிருந்து
பிரித்தெறியப்பட்ட
உனக்கான என் நேசம்...
கொஞ்ச காலம் துடிதுடித்து பின்
தன்னைத் தானே அழித்துக்கொண்டது!

இதோ அடுத்த மழைக்காலம்
ஆரம்பிக்க போகிறது!...
முடிவென்பதேயில்லை
என்ற கனவுகளோடு
உயிர்த்த ஒரு நேசம் முடிவுற்றது!!!

No comments: